காஷ்மீரிகளுக்கு எதிராக பதிவிட்ட மேகாலய ஆளுநர் : பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

டில்லி

காஷ்மீரிகளுக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட மேகாலய ஆளுநர் ததகாத்தா ராய் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

மேகாலய மாநில ஆளுநரான ததகாத்தா ராய் மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக பணி புரிந்தவர் ஆவார்.   அப்போது இருந்தே அவர் கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன.   சமீபத்தில் நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலுக்கு பின் அவர் பதிந்த டிவிட்டர் பதிவு தற்போது புதிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

ததகாத்தா ராய் தனது டிவிட்டரில், “ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியின் ஒரு வேண்டுகோள்.    இன்னும் இரு வருடங்களுக்கு காஷ்மிர் மாநிலம் மற்றும் அமர்நாத் கோவிலுக்கு யாரும் செல்ல வேண்டாம்.  காஷ்மீர வியாபாரிகளிடம் இருந்து காஷ்மீரில் தயாரிக்கப்படும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்.  காஷ்மீரிகளை அனைத்து விதங்களிலும் ஒதுக்குங்கள்” என பதிந்துள்ளார்.  பலர் அவரை கண்டித்து இந்த பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, “புல்வாமா தாக்குதலை முன்னிட்டு மேகாலயா ஆளுநர் காஷ்மீரையும் காஷ்மீரிகளையும் ஒதுக்குமாறு அறிக்கை விடுத்துள்ளார்.   தற்போது காஷ்மீர் மாணவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் இது போல அறிக்கை தவறானதாகும்.

கவர்னர் என்பவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்.   அவர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதியாக உள்ளதால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது அவர் கடமையாகும்.   இது போல அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அவர் பேசுவது முதல் முறை அல்ல.   ஆகவே அவருடைய இது போன்ற தொட்ர் கருத்துக்களுக்காக அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆளுநரின் இந்த கருத்துக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்களான உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆகியோர் தங்கள் டிவிட்டரில் வன்மையாக கண்டித்துள்ளனர்.   சமூக வலை தளங்களிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.   ஜனாதிபதி அலுவலகம் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.