மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்கும் பணி 60 மணி நேரத்தை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித் என்கிற 2 வயது சிறுவனை மீட்கும் போராட்டம் 60 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தை மீட்க, அப்பகுதி மக்கள் முயன்றும் அது முடியாமல் போனது. பின்னர் தீயனைப்பு படையினர், காவல்துறையினர் அங்கு விரைந்து வந்த போது, சிறுவன் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு தனியார் மீட்பு குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டதோடு, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து 2 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி சிறுவன் 88 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுவனின் கைகளை ஏர் லாக் செய்யப்பட்டது. இதன் மூலம் மேலும் சுர்ஜித் கீழே செல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் அண்ணா பல்கலை கழக மாணவர்கள் குழுவினர் அனுப்பிய ரோபோ மூலம், சுர்ஜித் உடல் உஷ்ண நிலை பார்க்கப்பட்டது. அதில் உஷ்ண நிலை, சாதரண அளவிலேயே இருப்பது தெரியவந்தது. ஆனாலும் நேரம் கடந்துச் சென்றதால், இறுதிக்கட்டமாக 3 மீட்டர் தூரத்தில் புதிதாக 90 அடி ஆழத்திற்கு புதிய துளை ஒன்று அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு அது 2 மீட்டர் தூரமாக மாற்றப்பட்டு, 7.05 மணிக்கு பணிகள் தொடங்கின. தொடர்ந்து 23 மணி நேரமாக நடந்து வரும் இந்த பணிகளில், முதலில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரத்தின் பல்சக்கரம் கடுமையான பாறைகளை உடைத்ததன் காரணரமாக பழுதடைந்ததால், கூடுதல் பலம் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஏற்கனவே 38 அடி வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், 40 அடி வரை மட்டுமே பாறைகள் இருக்கும் என்பதால் புதிய இந்திரத்தின் மூலம் காலையிலேயே சிறுவனை மீட்க முடியும் என்றும் கணக்கிடப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு புதிய ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டு பணி தொடங்கியது. ஆனால் 40 அடிகளை கடந்தும் தொடர்ந்து பாறைகளாகவே தென்பட, இந்த இயந்திரத்தின் பல்சக்கரமும் பழுதடைந்தது. பின்னர் வெல்டிங் செய்யப்பட்டு, மீண்டும் அப்பணிகள் தொடர்கிறது. புதிய இயந்திரத்தை வைத்து கடந்த 6 மணி நேரமாக வெறும் 10 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சிறுவனை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீட்டித்து வருகிறது.