திருச்சி:

ணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளையிடும் இயந்திரம் மூலம் இன்று காலை 7 மணி அளவில் பக்கவாட்டில் துளையிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையில்  17 அடியில் பாறை ஒன்று தென்பட்டுள்ளது. இதனால் குழந்தையை மீட்கும் முயற்சியில் மேலும் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவரது 2வயது குழந்தை  சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று முன்தினம் மாலை 5.40 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க 3வது நாளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல வகையில் குழந்தையை மீட்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் அடைந்த நிலையில், தற்போது  குழந்தை  100 அடியில் சிக்கி உள்ளது.

குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே இன்று காலை ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்கு அருகே குழி தோண்டப்பட்டு அதன் மூலமாக குழந்தை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றது.
தற்போது பள்ளம் தோண்டும் பணிகளிலும் இடையூறு ஏற்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.

காலை 7 மணி அளவில் இயந்திரம் மூலமாக பக்கவாட்டில் துளையிடும் பணி தொடங்கிய நிலையில் அங்கு 17 அடியில் பாறை ஒன்று தென்பட்டுள்ளது. இதனால் குழந்தையை மீட்கும் முயற்சியில் மேலும் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் மீட்புப்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். குழந்தையை மீட்க இன்னும் 4 மணி நேரம் வரை ஆகலாம் என்று தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.