சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம், தடுப்பணைகள் குறித்த பல ஆழமான புரிதல்கள் கிடைத்துள்ளன.

இதன்மூலம் மழைகாலங்களில் வீணாக ஓடும் நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், தமிழக அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் 10000 தடுப்பு அணைகள் கட்டப்படவுள்ளன.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் அவற்றில் அடக்கம். பெரியபாளையம் பாலேஷ்வரம் தடுப்பணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், தடுப்பணைகள் கட்டுவது குறித்து தெளிவான கோட்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த பாலேஷ்வரம் அணையானது 3.5 மீட்டர் உயரமும், 260 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த தடுப்பணையானது, ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 9 தடுப்பணைகளில் ஒன்று. இதன்மூலம் சென்னை புறநகர் பகுதியில் நிலத்தடி நீரை சிறப்பாக சேமிக்க முடிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 முதல் 2013ம் ஆண்டுவரை நடத்தப்பட்ட ஆய்வில், அந்த அணையானது தன்னைச் சுற்றி 1.5 கி.மீ. பரப்பளவிற்கு அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை சேமித்துவைக்க துணைபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர்க் கொள்ளளவு 0.8 மில்லியன் மீட்டர் கியூப் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.