அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க அரசு உத்தரவு
ஆக்ரா
அரசின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் நாட்டில் உள்ள மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும் இது அரசு உதவி பெறும் பல்கலைக்கழகமாகும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் வழங்குவதை போல் இந்த பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.
இது குறித்து புகார் எழுந்ததால் மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. அப்போது இந்த பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தாரிக் மன்சூர், “அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே இட ஒதுக்கிட்டில் இருந்து விலக்கு பெற்றுள்ளது” என தெரிவித்திருந்தார்.
அதை ஒட்டி சட்ட நிபுணர்களின் ஆலோசனையை தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் கேட்டிருந்தது அவர்கள் அளித்த ஆலோசனைப்படி தற்போது ஆணயர் ராம்சங்கர் கதாரியா, “அரசு உதவி பெறுவதால் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கான சலுகைகளை அளிக்க முடியாது.
அதனால் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கவில்லை எனில் அரசின் உதவிகள் நிறுத்தப்படும்” என அறிவித்துள்ளார். அவர் அவ்வாறு அறிவிக்கும் போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக துணை வேந்தர் உடனிருந்தார்.