இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு சட்டவிரோதம்! தமிழகஅரசின் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதி மன்றம்

சென்னை:

ட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்த சட்டத்தை, இது  சட்டவிரோதம் என கூறி, சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில்,  அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இது சட்ட விரோதம் என கூறி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றமும், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உறுதி செய்திருந்தது.

இதையடுத்து, கடந்த  2016ஆம் ஆண்டு, தமிழக அரசு பணியாளர்கள் பணி விதிகள் சட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு பணி மூப்பு வழங்கி வந்தது.

இந்த சட்டத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு  விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி மூப்பு வழங்க வகை செய்யும் 2016 சட்டப்பிரிவில் உள்ள 3 சட்ட பிரிவுகள் (1, 40, 70) ஆகியவை சட்ட விரோதம் எனவும், பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு முறை பொருந்தும் எனவும் கூறி, இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கினர்.