டில்லி

முத்ரா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள கடன்களில் பல வாராக் கடன்களாக உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் செல்ல திட்டம் என கூறப்படும் முத்ர கடன் திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்காக மத்திய அரசால் கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி அறிவிக்கபட்டது.   இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் ரூ.10 லட்சம் வரையில் வங்கிக் கடன்கள் பெற முடியும்.

இந்த முத்ரா கடன் மூன்று விதமாக வழங்கப்படுகிறது.  சிசு என்னும் பெயரில் ரூ.50000 வரையும், கிஷோர் என்னும் பெயரில் ரூ.50,001 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்னும் பெயரில் ரூ.5,00,001 முதல் ரூ, 10 லட்சம் வரையிலும் வங்கிகளால் முத்ரா கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2017-18 ஆம் ஆண்டு மட்டும் ரூ.2,46,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் 4.81 கோடி சிறு மற்றும் குறும் தொழில் முனைவோர் பயன் அடைந்துள்ளனர்.   இவர்களில் 40% பேர் பெண்கள் ஆவார்கள்.

இந்த கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி, “இந்த முத்ரா கடனில் இதுவரை ரூ. 11,000 கோடி வாராக் கடன்களாக உள்ளன.   இந்த முத்ரா கடன் பெறுவோர் ஈடாக வங்கிகளுக்கு எதையும் அளிக்க வேண்டாம் என விதி உள்ளது.  அதனால் இதை வசூல் செய்வதில் வங்கிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.   எனவே இனி முத்ரா கடன் வழங்கும் போது வங்கிகள் மிகவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக வாராக் கடன்கள் என சொல்லும்போது அவைகளுக்கு ஈடாக அளிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மூலம் வங்கிகள் கடனைப் பெறும் நிலை உள்ளது.   ஆகவே வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது.   ஆனால் முத்ரா கடன் வாராக் கடன் ஆனால் அதை திரும்ப பெறுவது இயலாத காரியம் என்பது குறிப்பிடத்தக்கது.