ரிசர்வ்வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா….

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

உலகநாடுகளை மிரட்டி வரும் கொரானா இந்தியாவில் சற்று குறையத்தொடங்கி உள்ளது.  நேற்று ஒரே நாளல் 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,09,960 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு, சாமானிய மக்கள்  மட்டுமின்றி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும்,  அரசியல்வாதிகள் என பாகுபாடின்றி அனைவரும்  பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசுக்கு (வயது 63) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது டிவிட் பதிவில்,  “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லை. நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என்னோடு சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு விடுங்கள். நான் தனிமைப்படுத்திக்கொண்டு பணிகளை தொடர்கிறேன்.

ரிசர்வ் வங்கி பணிகள் இயல்பாக நடைபெறும். நான் துணை கவர்னர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் காணொலி காட்சி, தொலைபேசி வழியாக தொடர்பில் உள்ளேன்” என கூறி உள்ளார்.