ரிசர்வ் வங்கி விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ்

டில்லி:

ரபரப்பான சூழலில் நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாட்டின் உயர்ந்த அமைப்பான ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் பாஜக அரசு தலையிடுவதாக பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு விவகாரம் ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலேயே அமல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போதய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி ஏற்ற உர்ஜித் படேலும், மோடி அரசின் நெருக்கடி காரணமாக கடந்த 10ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, தற்போது புதிய ரிசர்வ் வங்கி கவர்னராக  முன்னாள் நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அரசின் உயர்அதிகாரிகள் தொடர்ந்து பதவி விலகி வருவது உலக நாடுகளிடையே இந்தியா மீதான நம்பகத்தன்மையை குறைத்து வருகிறது.

இதன் காரணமாகவும், பண மதிப்பிழப்பு குறித்தும் விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இந்த ஒத்தி வைப்பு தீர்மானம் விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது குறித்து பாராளு மன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்து அறிவிப்பார்.