ஏ டி எம் களில் தேவையான பணம் வைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை தேவை : பாராளுமன்றக் குழு

டில்லி

டிஎம் களில் போதுமான பணம் வைத்திருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றக் குழு கூறி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நாடெங்கும்2,21,492 ஏடிஎம் கள் இயங்கி வந்தன. இதில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஏடிஎம்கள் 1,43,844 ஆகும். தனியார் வங்கிகள் சார்பில் 59,645 ஏடிஎம்கள் இயங்குகின்றன. மீதமுள்ளவை வெளிநாட்டு வங்கிகள் மற்றும் சிறு வங்கிகள், தனியார்கள் ஆகியோரால் இயக்கப்படுகின்றன.

இந்த ஏடிஎம்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒரு பராளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப மொய்லி தலைமையில் இயங்கி வருகிறது. அந்த குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், “பணமதிப்பிழப்பு நேரத்தில் பல ஏடிஎம் கள் செயல்படவில்லை. அதற்கு கரன்சி நோட்டுகளின் தட்டுப்பாடு காரணம் என கூறப்பட்டது.

அதை ஓட்டி டிஜிட்டல் பரிமாற்றத்தை ரிசர்வ் வங்கி ஊக்குவித்தது. ஆனால் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு வாய்ப்பு இருப்பதில்லை. ஆகவே மக்கள் ஏடிஎம் களை நம்பி உள்ளனர். ஆனால் தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து பல நாட்களாகி கரன்சி தட்டுப்பாடு அறவே இல்லாத போதும் பல ஏடிஎம்கள் இயங்குவதில்லை.

இதனால் நாட்டில் தேவையில்லாத பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதை மாற்ற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஏடிஎம்களிலும் தேவையான பணம் நிரப்ப தேவையான உத்தரவுகளை இட வேண்டும். மக்கள் மனதில் தேவையற்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.