டில்லி

வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கடந்த 2016ல் இருந்தே எதுவும் கேளாமல் இருந்தது பெரும் விவாதத்தை உண்டாக்கி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகோன் நிறுவனம் ரூ 3250 கோடி கடன் பாக்கித் தொகையை திருப்பி செலுத்தவில்லை.   அதனால் அந்தக் கடன் வாராக்கடனாக மாற்றப்பட்டுள்ளது.    இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.   இந்த வங்கியின் தலைவரின் கணவருக்கு வீடியோ கோன் நிறுவன அதிபர் ஒரு நிறுவனத்தை குறைந்த விலைக்கு விற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.  அதை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் மறுத்தது.

கடந்த 2016ஆம் வருடம் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியில் இருந்தார்.  அந்த சமயத்தில் ஐசிஐசிஐ க்கு வீடியோகோன் நிறுவனம் தர வேண்டிய கடன் பாக்கி குறித்து ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பி இருந்தது.   அதற்கு ஐசிஐசிஐ நிர்வாகம் பதில் அளித்ததாக தெரியவில்லை.  ஆனால் அதற்குப் பிறகு தற்போது வரை  ரிசர்வ் வங்கி இது குறித்து மேலும் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் இருந்துள்ளது.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர், “எங்கள் வங்கி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்பது தவறான தகவல்.    ஆனால் அந்த பதிலுக்கு மேல் மற்ற கேள்விகளோ விசாரணைகளோ நடைபெறவில்லை.”  என தெரிவித்துளார்.

இதற்கு நிதிநிலை ஆர்வலர்கள், “இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கலாம்.   ஆனால் இன்று வரை அந்த பதில் குறித்தோ அந்த பதிலின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தோ எந்த ஒரு தகவலும் ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை.   இது போல பொருளாதாரக் குற்றங்கள் நிகழும் வேளையில் ரிசர்வ் வங்கி எந்த ஒரு முன்னேச்சரிகை நடவடிக்கையும் எடுக்கவில்லை’  என ரிசர் வங்கி மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் இந்த மௌனம்  மக்களிடையேயும் நிதி நிலை ஆர்வலர்களிடையேயும் கடும் விவாதத்தை எழுப்பி உள்ளது