கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்! சோனியாவுக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடிதம்

டெல்லி:

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா கடிதம் எழுதி உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். அவர் சோனியாவுக்கு எழுதி உள்ள ராஜினாமா கடிதத்தில், தான் 18 ஆண்டு காலம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன். தற்போது விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கம், காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் நிறைவேற்ற முடியவில்லை. “இனிமேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் எதுவும் செய்ய முடியாது என நம்புகிறேன். என்னுடைய மக்களுக்காக, இந்த புது தொடக்கத்தை துவக்கியுள்ளேன்.

அதனால், கட்சியில்  தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை.  தான் அதில் இருந்து விலகுகிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துஉள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற பூசல் காரணமாக, மனஉளைச்சலில் இருந்து வந்த சிந்தியா இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.