Random image

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: 28 கிராம மக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நெல்லை:

நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 28 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,  விவசாயிகள் என நூற்றுக்கணக்கானோர் நெல்லை ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன்  காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில்   சிவகிரி முதல் புளியரை வரை 85 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்கள் கையப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், சிவகிரி முதல் புளியரை உள்ள சுமார் 85 கிலோ மீட்டர்  பகுதியில் வசித்து வரும் 28 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், சாலை விரிவாக்கத்துக்காக தங்களது விவசாய நிலங்களை தர மறுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று 28 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பலர் திரண்டு வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.  இதுகுறித்து ஏற்கனவே கடைய நல்லூர் தொகுதி எம்எல்ஏ அபுபக்கரிடமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையிலும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இதன் காரணமாக  நெல்லை ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.