பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக்கொடி : படம் பிடித்த செய்தியாளர் கைது?

பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கறுப்புக்கொடி ஏற்றியதை படம் பிடித்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தும் ஐந்து மாவட்டங்களில் கறுப்பு கொடியேற்றி போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தது.  அதன்படி இன்று, இந்த 5 மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது  நிலம் மற்றும் வீடுகளில், கறுப்புக்கொடியெற்ற முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பெரும்பான்மையான இடங்களில் மிரட்டி கறுப்புக்கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர். அதையும் மீறி பல விவசாயிகள்  கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள சி.பி.எம் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்னர் வேங்கிக்கால் பகுதியின் சாலையோரம் கறுப்புக்கொடி ஏற்ற  சிபிஎம் நிர்வாகிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனை கேரளாவின் ‘மாத்ரு பூமி’ தொலைக்காட்சியின்  நிருபர் அனுப்ஜோஷ், ஒளிப்பதிவாளர் முருகன், தீக்கதிர் செய்தியாளர் ராமதாஸ் போன்றோர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா காவல்நிலைய காவலர்கள் கறுப்புக் கொடியேற்றக்கூடாது என எச்சரித்து, அவர்களை கறுப்புகொடி ஏற்ற விடாமல் தடுத்தனர்.

இந்த சம்பவத்தை படம் எடுத்துக்கொண்டிருந்த செய்தியளர்களை தடுத்த காவலர்கள் கறுப்புக்கொடி ஏற்றுவதை படம் எடுக்கக்கூடாது, செய்தியாக்க கூடாது என தங்கள் மாவட்ட கண்காணிப்பாளர்    உத்தரவிட்டுள்ளதாக கூறி செய்தியாளர்கள் 4 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு அவர்களை விசாரணை என்ற பெயரில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

பிறகு சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்களை மட்டும் விடுவித்தனர்.

ஆனால்  தீக்கதிர் செய்தியாளர்  ராமதாஸ், சிஐடியூசி சங்கத்தை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இது செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.