புதாபி

மீரகத்தில் நடந்த இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள் இருநாட்கள் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபியில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு இந்தியா சிறப்பு விருந்தினராக அமீரக அரசால் அழைக்கப்பட்டிருந்தது. இந்திய விமானப்படை பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமத் பயங்கரவாதிகள் முகாமை அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்த அழைபை திரும்ப பெறுமாறு அமீரக அரசை வற்புறுத்தியது. அதற்கு அமீரகம் மறுத்து விட்டது.

அதை ஒட்டி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை. அரசின் சார்பில் ஒரு சில அதிகாரிகளை மட்டும் அவர் அனுப்பி வைத்தார்.  கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில் பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கடந்த இந்தியாவில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடுகலை மற்ற நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது இந்தியா ஆயுதப் படை தாக்குதலை நடத்துவதாக கூறி இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருணை காட்டி விடுதலை செய்ததாக கூறி அவருக்கு அந்த தீர்மானத்தில் புகழாரம் சூட்டப்பட்டிருந்தது.

இது குறித்து பாகிஸ்தான் அரசு “இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத் தக்கது. அந்த தீர்மானத்தின் மூலம் இஸ்லாமிய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில்  பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளன.” என கருத்து தெரிவித்துள்ளது.