கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி உறுதிபட தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை. இந்த சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து எதிர்க்கின்றன.

கேரளா, பஞ்சாப் சட்டசபைகளில் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இப்போது, மேற்கு வங்கத்திலும் இதே போன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதற்கு முன்பாக அதை கவனமாக படிக்க வேண்டும் என அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களையும் நான் வலியுறுத்துகிறேன். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றுவோம். அனைவரும் ஒப்புக்கொண்டால், கொல்கத்தாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். என்பிஆர் என்பது ஒரு அபாயகரமான விளையாட்டு என்று கூறினார்.