டில்லி

ணவு விடுதிகளில் மினரல் வாட்டர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவு விடுதிகளில் பாட்டில்களில் அடைக்கப் பட்ட குளிர் பானங்கள் மற்றும் மினரல் வாட்டர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இதற்கு உணவு விடுதிகள் சங்கம் அளித்த விளக்கத்தின் பேரில் அந்த வழக்கை கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.   ஒரு வாடிக்கையாளருக்கு குளிர்சாதன வசதி உட்பட பல வசதிகள் செய்து தருவதால் உணவு விடுதிக்கு அதிக பட்ச விலையை விட அதிக விலைக்கு விற்க உரிமை உண்டு என அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவுக்கு மத்திய அரசு தனது பதிலை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.  அதில், ”உணவு விடுதிகளில் அதிகபட்ச விலையை விட அதிக விலைக்கு மினரல் வாட்டரை விற்பனை செய்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.  இது உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மால்கள் ஆகியவைகளுக்கு பொருந்தும்.

இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அரசும் வரி ஏய்ப்பால் பாதிப்பு அடையும்.   மற்ற வர்த்தகர்களைப் போலவே உணவு விடுதிகளும் அதே அடக்க விலையில் வாங்கும் போது மினரல் வாட்டருக்கு அதிக பட்ச விலை அல்லது அதற்கு குறைவாக மட்டுமே விற்க உரிமை உண்டு. மீறினால் சட்டப்படி முதல் முறை ரூ. 25000 வரை அபராதம் விதிக்கப்படும்.   இரண்டாம் முறை அல்லது மீண்டும் தொடர்ந்தால் ரூ.50000 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என அரசு தெரிவித்துள்ளது.