டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுபாடுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்திலி ருந்து நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளன.
இதற்கிடையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தொடங்கி விட்டன.  குழந்தைகளுக்குச் சிறிதுகூட ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து,  ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் பொருட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும் பணியில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் இறங்கியது.
இந்த நிலையில், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மழலையர் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஒரே நாளில் 30 நிமிடங்களுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்
1 – 8 வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்
9-12 வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்கள் மிகாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளார்.