புதுடெல்லி:

நாடு முழுவதும் முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருந்தாலும், காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


கடந்த 1952-ம் ஆண்டிலிருந்து கணக்கிடும் போது, 16-வது மக்களவையில் தான் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறைவாக 23 எம்பிக்களாக இருந்தது.

தற்போது முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

எனினும், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெற்றி பெற்ற முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லீமீன் வேட்பாளராக மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத் மக்களவை தொகுதியில் இம்தியாஜ் ஜலீல் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், ஐதராபாத்திலும் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் தொகுதியிலிருந்து இக் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

முஸ்லீம்கள் அதிகம் இல்லாத அவுரங்காபாத் தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக் கட்சி இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு இது நல்ல தேர்தலாக அமைந்துவிட்டது.
ஐதராபாத் மக்களவை தொகுதியில் இக்கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஓவாய்ஸி 4 முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பகவந்த் ராவை 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு பெற்ற வெற்றியைவிட, தற்போது வாக்கு வித்தியாசம் அதிகமாகும்.
அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் போட்டியிட்ட 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இக்கட்சியின் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2014 தேர்தலில் உத்தரபிரேதேசத்தில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் இம்முறை பகுஜன் சமாஜ் கட்சியிலிந்து 3 முஸ்லிம்களும், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 3 முஸ்லிம்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மேற்கு வங்கத்தில் முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை 8-லிருந்து 6-ஆக குறைந்துள்ளது.
பீகாரில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலைவிட 2 முஸ்லீம் எம்பிக்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.

30% முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட அசாமில், 2 முஸ்லீம் எம்பிக்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
காஷ்மீரில் வெற்றி பெற்ற 3 முஸ்லீம்களும் தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் 4 முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.

ஆனால் இம்முறை 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.