புதுடெல்லி: மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை, நகர்ப்புறங்களில், ஒரு சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ.192 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது விலைக் குறைப்பாகும்.
இந்த விலைக் குறைப்பு மே 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.581.50 (முந்தைய விலை ரூ.744) என்பதாகவும், மும்பையில் ரூ.579(முந்தைய விலை ரூ.714.50) என்பதாகவும், சென்னையில் ரூ.569.50(முந்தைய விலை ரூ.761.50) என்பதாகவும், கொல்கத்தாவில் ரூ.584.50(முந்தைய விலை ரூ.774.50) என்பதாகவும் இருக்கும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தரவிலிருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்நிறுவனம்தான், நாட்டின் மிகப்பெரிய சில்லறை சிலிண்டர் விற்பனை நிறுவனமாகும். ‘இண்டேன்’ என்ற பிராண்ட் பெயரில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போதைய நிலையில், ஒரு இணைப்பிற்கு, அதிபட்சமாக ஆண்டுக்கு சுமார் 12 சிலிண்டர்கள் மானியவிலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேலான ‍தேவைகளுக்கு சந்தை விலையில்தான் சிலிண்டர் பெற்றுக்கொள்ள வ‍ேண்டும்.