சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு…

சென்னை:
சென்னை மாநகராட்சியில் முழு அடைப்பு அமலில் இருக்கும் நிலையில் காய்கறிகளின் வருகை குறைந்ததால் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
முழு அடைப்பு காரணமாக சென்னைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், கடந்த 20 நாட்களாக  பீன்ஸ், கிளஸ்டர் பீன்ஸ், கொத்துமல்லி போன்ற காய்கறிகளின் விலை உயர்ந்து இருந்தது, இதனால் ஏற்கனவே மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கபட்டிருந்த நிலையில், தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, போன்ற காய்கறிகளும் விலை ஏறி உள்ளது. இதனால் சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
போக்குவரத்து செலவு அதிகரித்ததாலும், மற்ற மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தாலும், திருமழிசைக்கு மொத்தமாக வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஆலந்தூருக்கு வரும் காய்கறிகளும் குறைந்துவிட்டது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், கீழகடலை போன்ற இடத்தில் வசிக்கும் மக்கள் ஆலந்தூரில் தான் வந்து காய்கறிகள் வாங்க வேண்டும், காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையும் இரட்டிப்பாகியுள்ளது.
திருமழிசையில் சென்ற வாரம் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ பூண்டு 300 ரூபாயாக உயர்ந்துள்ளது, மேலும் பீன்ஸ் ஒரு கிலோ 130 ரூபாயாக உள்ளது. மொத்த விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்தூர் சந்தையில் உள்ள மொத்த விற்பனையாளர்- ஜி மூர்த்தி கூறியுள்ளதாவது: பொதுவாக வார இறுதி நாட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை இரட்டிப்பாகி உள்ளது, கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ உருளைக்கிழங்கு  தற்போது 50 முதல் 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, மேலும் புதினா, கொத்துமல்லி விலைகளும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கொத்து கொத்துமல்லி ரூபாய் 10-ற்க்கு விற்கப்பட்டது ஆனால் தற்போது 35 ரூபாயாக உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் முழு அடைப்பு காரணமாகவும்,  மழையாலும் காய்கறிகளின் வரத்து முழுமையாக குறைந்து விட்டது. ஆனால் பீட்ரூட், செள செள, முள்ளங்கி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை குறைந்தே காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் குறையும் என்று நினைக்கிறேன், தென்மேற்கு பருவமழை கூடிய விரைவில் துவங்க உள்ளதால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு காய்கறிகளின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளதால் சென்னைவாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.