டிஎன்சேஷன் வழியை பின்பற்றுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை

டில்லி:

ந்த ஆண்டு இறுதியில் 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் டி.என்.சேஷன் வழியை பின்பற்றி மக்களிடம் நம்பகத் தன்மையை தக்க வைத்துக்கொள்ளுங்கள் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்

இந்த ஆண்டு இறுதியில் 4 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசியல் கட்சிகள் செய்துவரும் அத்துமீறிய செயல்களை தடுக்க மறுத்து வருகிறது… வாக்காளர் பட்டியல் சரியான முறையில் இல்லை.. போலி வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில்  நியாயமான மற்றும் நடுநிலையான தேர்தலைத் தடை வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு போன்றவைகளில் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,  தேர்தல் நடைமுறைகளில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் போல செயல்பட்டு மக்களிடம் நம்பகத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு  உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறி உள்ளது.

மேலும், தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு கூறியது.

இந்திய தேர்தல் வரலாற்றின் பக்கங்களில் டி.என். சேஷன் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது.  தேர்தல் கமிஷனின் அதிகாரம் என்ன என்பதை மக்களிடம் உரத்து ஒலித்தவர். தற்போதைய தேர்தல் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்து  பெரும் பங்களிப்பைச் செய்தவர் டி.என். சேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.