ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு  அமைத்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட் டத்தில் காவல்களின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய நிலையில், ஆலைகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில்,  மத்திய மாநில அரசுகள் சார்பில், ஸ்டெர் லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறது என்பது குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அதை கண்டு கொள்ளாமல் ஓய்வுபெற்ற நீதிபதி வசிப்தர் தலைமையில் ஆய்வுகுழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த விசாரணை குழுவினர் , ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்ட  விவகாரத்தில் மாநில அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக்களை 3 பேர் குழு அறிய வேண்டும் எனவும், விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்  உத்தர விடப்பட்டது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம்  ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனுவில், இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஓய்வுபெற்ற நீதிபதி வசிப்தர், ஸ்டெர்லைட் விசாரணை ஆணையர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.