முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு

சென்னை:
முழு ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று காலை முதல் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 5 நபர்களுக்கு மேல், வெளியில் கூட தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவையை மீறி வெளியே வருபவர்களின் வாகனத்தில் மஞ்சள் சாயம் பூசுவது, வாகனத்தை சைட் லாக் பண்ணிவிட்டு எட்டுப் போடச் சொல்வது எனப் பல நூதன தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்தச் சோதனையின் போது லட்சக் கணக்கான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி எந்த இடத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதோ அதே இடத்திலோ அல்லது காவல் நிலையங்களிலோ ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 50 வாகனம் என்கிற அடிப்படையில் திருப்பி ஒப்படைக்கப் பட்டு வருகிறது. இந்த நிகழ்வின்போது வாகனத்தை பெறுவதற்கு வரும் உரிமையாளர்கள் சமூக இடைவெளியயை பின்பற்ற காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்