மதிப்பெண் முறைகேடு: 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை அதிரடியாக ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம்.

சென்னை:

திப்பெண் முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு அரியர் தேர்வு எழுதிய 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை அதிரடியாக ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது. இது மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில், தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டின்போது அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பணம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.  பல ஆண்டுகளாக இந்த முறைகேடு நடைபெற்று வருவதாக  குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில்  கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையின்போது  கடந்த  2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகு, 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து ஏராளமான புகார்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில்,  பதிவாளரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும்,  தற்காலிக ஊழியர்கள் 37 பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துந டவடிக்கை எடுத்தது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்த நிலையில், தற்போது,  2017/18ல் செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிககை எடுத்துள்ளது. 130 மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இது மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.