மேகதாது அணை கட்டுவது குறித்து 7ந்தேதி நேரில் ஆய்வு: கர்நாடக அமைச்சர் தகவல்

பெங்களூரு:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து 7ந்தேதி நேரில் ஆய்வு செய்ய இருப்ப தாக  கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து உள்ளார்.  அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை 6 முதல் 9 மாதங்களில் தயார் செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

தமிழகத்திற்கு தண்ணீர் வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. பெங்களூர் குடிநீர் தேவைக்காக என கூறி, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அணை குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டது.

இந்த பிரச்சினை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்று டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் எதிரொலித்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் போதாது, காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட நிபுணர் குழுவுடன் 7 ம் தேதி ஆய்வு செய்வதாக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் என்றார்.

தற்போது  64 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு ஒமுதல்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒஉள்ளதாக கூறியவர், கட்டப்பட உள்ள புதிய அணையில் இருந்து ஒருசொட்டு தண்ணீர் கூட விவசாயத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும்,  95 சதவீதம் தண்ணீர் தமிழகத்திற்கே கிடைக்கும் என்றும் கூறினார்.