சான்ஃப்ரான்சிஸ்கோ

முகநூல் அதிபர் மார்க் சுபர்பெர்க் வீட்டு குப்பைகளைக் கொண்டு அருகில் இருப்பவர் தமது வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.

நாம் தினம் தெருவில் காணும் பலரில் குப்பை பொறுக்குபவர்களும் உள்ளனர். மக்கள் தேவை இல்லை என எறியும் பொருட்களை குப்பையில் இருந்து எடுத்துச் சென்று அதை விற்று தங்கள் வாழ்வாதாரத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.  இது போல் குப்பை பொறுக்குவோர் இந்தியாவில் மட்டுமே உள்ளனர் எனவும் மேல் நாடுகளில் இது போல கிடையாது எனவும் நம்மில் பலர் பேசுவதை கேட்டுள்ளோம்.

ஆனால் உலகின் பணக்கார நாடு எனக்கூறப்படும் அமெரிக்காவிலும் குப்பை பொறுக்கி விற்று பிழைப்போர் உள்ளனர். அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் குப்பையை அகற்றும் தொழிலாளர்களை விட குப்பை பொறுக்கும் ஏழைகள் அதிகம் உள்ளனர் என்பதே உண்மையாகும்.

சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ஜேக் ஆர்டா என்பவர் ராணுவத்தில் சிறு பணிகள் செய்து வெளியேறியவர் ஆவார்.   ஆர்டோ வசிக்கும் இடத்தில் இருந்து 4 கட்டிடங்கள் தள்ளி உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகநூல் அதிபர் மார்க் சுபர்பெர்க் வசித்து வருகிறார். ஆர்டோவின் வீட்டில் உள்ள பல பொருட்கள் மார்க் வீட்டில் இருந்து எறியப்படும் குப்பைகளே ஆகும்.

குப்பை பொறுக்குவதை மட்டுமே முழு நேர பிழைப்பாக கொண்ட ஆர்டோ ஒரு முறை பெரும் செல்வந்தர்கள் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டிகளை குறி வைத்துகுப்பை பொறுக்குகிறார்.  இவருக்கு ஒரு முறை குப்பையில் இருந்து புத்தம் புதிய ஜீன்ஸ் பேண்ட் மற்றும் 4 சட்டைகள் கிடைத்துள்ளன. அதை பேக் செய்திருந்த கவர் அழுக்காக இருந்ததால் இவை தூக்கி எறியப்பட்டுள்ளன.

ஆர்டோவின் இல்லத்தில் உள்ள காபி மேக்கர்,வாக்குவம் கிளீனர், ஹேர் டிரையர், ஒரு சிறு டிவி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் குப்பையில் இருந்து கிடைத்தவைகளே ஆகும். அனைத்தும் உபயோகப்படுத்தும் நிலையில் இவருக்கு கிடைத்துள்ளன.

குப்பை பொறுக்குவது குறித்து ஆர்டோ, “எனக்கு 12 குழந்தைகள் உள்ளன. நான் ராணுவத்தில் பணி புரிந்துள்ளேன். பல நாடுகளுக்கும் சென்றுள்ளேன். அமெரிக்காவுக்கு வந்த பிறகு என் மனைவி எனது குடிப்பழக்கத்தால் என்னை பிரிந்தார். வீடு வாசலின்றி தவித்த எனக்கு அரசு குடியிருப்பு அளிக்கபட்டது. விளையாட்டாக குப்பையை நோண்டிய எனக்கு அதில் பல புதையல்கள் கிடைத்தன.

நான் தற்போது தினமும் 30-40 டாலர்கள் (ரூ.2000 – 2500) குப்பைகளை விற்று சம்பாதித்து வருகிறேன். இது என் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. எனது தேவைக்கு எடுத்துக் கொள்வது போக மீதமுள்ளவற்றை நான் என்னைப் போல் வறுமையில் வாடும் மூத்த ராணுவத்தினர் நலனுக்கு அளிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்