தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி உள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள்!

ஐதராபாத்:

டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும், தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். தேர்தலில்  போட்டியிடும் நான்கு கோடீஸ்வர வேட்பாளர்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 700 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நான்கு பேரில், ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி ஆவார். மற்ற மூன்று வேட்பாளர்களும் முறையே பா.ஜ.க., தெலுங்குதேசம் மற்றும் டி.ஆர்.எஸ். கட்சிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் மிகஅதிக அளவிலான சொத்துக்களை கொண்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்கோபால் ரெட்டி. இவரின் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் முணுகோடே தொகுதியில் போட்டியிடும் ராஜ்கோபால் ரெட்டி, தனக்கு 314 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்பாளர் பட்டியலுடன் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து உள்ளார்.

இவர் கடந்த  2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடும்போது தனது சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் என்று தெரிவித்திருந்தார். கடந்து நன்கு ஆண்டுகளில் இவர் சொத்துக்களின் மதிப்பு 371 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கோபால், 2009 முதல் 2014 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார், தற்போது தெலுங்கானா சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அடுத்ததாக, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை (TRS) சேர்ந்த மாரி ஜனார்தன் ரெட்டி, நாகர்குர்நூல் தொகுதியில் மறுதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமர்ப்பித்த ஆவணத்தில், தனது குடும்ப சொத்துக்களின் மதிப்பு 161 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் பொது அவருக்கு இருந்த சொத்து மதிப்பு 111 கோடி ரூபாய் ஆகும்.

மூன்றாவதாக, பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)-யின் ஜி. யோகானந்த், ஹைதராபாத் நகர புறநகர்ப் பகுதியான செரிலிங்கம்பள்ளி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு 146 கோடி ரூபாயாகும்.

கம்மம் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேச கட்சி (TDP)யை சேர்ந்த நாம நாகேஸ்வர ராவ், தனது சொத்துக்களின் மதிப்பு 113 கோடி ரூபாய் என மனுத்தாக்களின் போது தெரிவித்தார். இவர், 2009-2014-ல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது இவரின் சொத்து மதிப்பு 338 கோடி ரூபாயாக இருந்தது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் மாநில மக்களை மிரள வைத்துள்ளது.