கமல் – கௌதமி : தொடரும் மோதல்

நடிகர் கமல் மற்றும் நடிகை கௌதமி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நாயகர்களில் ஒருவரான கமல்ஹாசன், வாணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் விவாகரத்து பெற்றனர். பிறகு கமல், இந்தி நடிகை சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் கருத்து மாறுபாடு ஏற்படவே விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில், ஏற்கெனவே விவாகரத்து பெற்றிருந்த நடிகை கௌதமியுடன் 2005ம் ஆண்டு முதல் கமல் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

பத்துவருட காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2016ம் ஆண்டு பிரிந்தனர்.

“கமலுடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று கௌதமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டதாக தகவல் பரவியது.

இதை மறுத்த கௌதமி கடந்த பிப்ரவரி மாதம், “கமலை பிரிந்தது பிரிந்ததுதான் என் மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு அவரைப் பிரிந்தேன். அவருடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. கமல் அரசியலை நான் ஆதரிக்கவும் இல்லை. என்னை, கமலுடன் உடன் ஒப்பிட்டு பேசுவது மனவருத்தம் அளிக்கிறது” என்றார்.

மேலும், “ தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு,  கமலின் ராஜ்கமல் நிறுவனம்  இன்னும் சம்பளம் வழங்கவில்லை’ என்று கூறினார்.

இதையடுத்து தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளமே தராத கமல், எப்படி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்? எப்படி ஊழலை ஒழிக்கப் போகிறார் என்று சமூக தளங்களில் பலரும் விமர்சித்தனர்.

அதே நேரம்,  இவ்வளவு நாட்கள் சம்பளம் பாக்கி குறித்து வாய்த்திறக்காமல் இருந்த கௌதமி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த பிறகு, இவ்விவகாரம் குறித்து பேசியிருப்பது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கமல், “சம்பளம் வரவில்லை என்றால் ராஜ்கமல் பிலிம்ஸில் தெரிவித்து கௌதமி வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

இந்த நிலையில், கமல்ஹாசன், தனது கட்சிக்கான அங்கீகாரம் தொடர்பாக டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவரிடம், கௌதமிக்கு சம்பளபாக்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு கமல், “கௌவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டோம். சம்பளம் வழங்கவில்லை என கூறினாரே தவிர, வழங்கிய பின்னர் வழங்கப்பட்டதாக கூறவில்லையா” என எதிர் கேள்வி எழுப்பினார்.

கமல் அரசியல் கட்சி துவங்கியிருக்கும் நிலையில், இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் அரசியலே காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

“கௌதமி பாஜக ஆதரவாளர். பிரதமர் மோடியையும் சந்தித்தார். ஆனால கமல், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆகவே கௌதமி வேண்டுமென்றே கமலுடன் சண்டையிழுக்கிறார்” என்று அவர்கள்  கூறுகிறார்கள்.