ஹசாரிபாக்: காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே குறித்து பிரக்யா தாகூர் கூறிய கருத்தின் சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிராஜ் சேனா என்ற அமைப்பு, கோட்சேவின் பிறந்த நாளைக் கொண்டாடியதோடு அல்லாமல், முக்கிய இடம் ஒன்றுக்கும் கோட்சேவின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

உள்ளூர் அறிஞர் ஹாடாவின் பெயரைக் கொண்டிருந்த அந்த இடத்திற்கு, நாதுராம் கோட்சே செளக் எனப் பெயரிட்டுள்ளனர்.

கோட்சேவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அந்த அமைப்பினர், அவரை உண்மையான தேச பக்தன் எனப் புகழ்ந்து பேசியதோடு, காந்தியடிகளையும், கோட்சேவையும் சமமான அளவில் மதிப்பாக கூறினர்.

ஆனால், கோட்சேவின் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பதாகை, மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பெயரை மாற்றி வைக்கப்பட்ட பலகைக்கான அனுமதியை பின்னர் பெறவுள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அப்பலகையை எடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.