அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைய உள்ளன

டில்லி

னைத்து மாநில அரசுகளும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. இதில் ஒரு முதியவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அத்துடன் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அகதியாக அறிவிக்கப்பட்டார். ஆவணங்களை அளித்த பிறகு அவர் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

இதை ஒட்டி வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்திய வெளிநாட்டவர் உரிமை சட்டத்தின்படி சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைவரும் தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள். அதை ஒட்டி தேசிய குடியுரிமை பட்டியல் அமைக்கப்பட்டு ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்படுவோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அரசு அளித்துள்ள மசோதாவின் படி இந்திய குடியுரிமை பெற மேலும் சில விதிகளை அளித்துள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள பலரும் பட்டியலில் இருந்து விலக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை ஒட்டி பல குழப்பங்கள் ஏற்பட்டு பலர் வெளிநாட்டவர்  தீர்ப்பாயத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை மாதம் 1 ஆம் தேதிக்குள் 1000 தீர்ப்பாயங்கள் அமைக்க உள்ளது.

அசாம் மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் புதிய விதிமுறைப்படி நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 லட்சம் பேர் இதுவரை வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தை நாடி உள்ளனர். இந்த வழக்குகளை விரைவில் முடிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டவர் தீர்பாய விதிகளில் மாறுதல்கள் செய்துள்ளது.

அந்த மாறுதலின் படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விடுபட்ட யாவரும் அணுகி தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும். இது குறித்து விசாரிக்க அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முறையீட்டுடன் அளிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் குடியுரிமை வழங்கவும் மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed