‘ரிங் மாஸ்டர்’ மோடி மஸ்தான்; சர்க்கஸ் கூடாரமான அ.தி.மு.க.: மு.க.ஸ்டாலின்

தஞ்சை:

ஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அ.தி.மு.க. கட்சி ஒரு சர்க்கஸ் கூடாரம் என்றும், அதை இயக்கும் மோடி மஸ்தான் என்ற  ‘ரிங் மாஸ்டர்’ டில்லியில் இருக்கிறார் என்றும் காட்டமாக பேசினார்.

தஞ்சாவூர் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணங்களை நடத்திய வைத்து வாழ்த்தி பேசினார். அப்போது, மண மக்களையும், அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்தி பேசினார்.  அதைத்தொடர்ந்து அரசியல் பேசிய ஸ்டாலின்,  அண்மை காலமாக ஒருவர் பேச தொடங்கி உள்ளார்… அவர் யார் என்பது உங்களுக்கு தெரியும் என்றவர்,  மத்திய அரசின் எடுபிடி முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக அவர்களது கட்சி நிகழ்ச்சிகளில்,  தி.மு.க.வை கடுமையாக  விமர்சித்து பேசி வருகிறார். அப்போது திமுகவை ஒரு கம்பெனி என்று கூறி வருகிறார்… ஆனால்,   கம்பெனி என்பதுகூட ஒரு கவுரவம் தான், அதற்கென்று ஷேர்ஹோல்டர்ஸ் எல்லாம் உண்டு, பங்குதாரர்கள் உண்டு, உரிமையாளர்கள் உண்டு, பணியாற்றக் கூடிய தொழிலாளர்கள் உண்டு, ஊழியர்கள் உண்டு. கம்பெனியை நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.

ஆனால், அதிமுகவோ   சர்க்கஸ் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. அந்த   சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டீர்கள் என்றால், டில்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான்.

நான் மோடியை சொல்லவில்லை, ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள்.. அந்த ரிங் மாஸ்டர் டில்லியில் இருக்கிறார் என்று கூறினார்.

தமிழகத்தில் கொள்ளைக்கூடாரம் ஆட்சி செய்து வருகிறது,  எங்கு பார்த்தலும் கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன், என்ற நிலையிலேயே உள்ளது.  ஊழலுக்கு நாங்கள் ஆதாரம் தர வேண்டியதில்லை… எடப்பாடி மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டிலே எத்தனையோ முதல்-அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் கூட புகார்கள் வந்திருக்கிறது, ஊழல்கள் வந்திருக்கிறது, குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. ஆனால், முதல்-அமைச்சர் மீதும் இதுவரை தமிழ்நாட்டிலே சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது. இதைவிட அசிங்கம் நம்முடைய தமிழ்நாட்டுக்கு வேறெதுவும் தேவையில்லை.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.