மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, அபுதாபியில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத டி-20 போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரின்கு சிங்கிற்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி கிரிக்கெட்டின் ரமலான் டி-20 கோப்பை போட்டியில், டெக்கான் கிளாடியேட்டர் அணிக்காக ஆடினார் ரின்கு சிங். அந்த அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ரின்கு. இறுதிப் போட்டியில் 104 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம், அவரின் அணி சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்கு காரணமானார்.

ஆனால், இப்போட்டியில் அவர் கலந்துகொள்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற போட்டிகளில் ஆடுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென்பது கட்டாயம்.

எனவே, விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ரின்கு சிங் 5 ஆட்டங்கள் மட்டுமே ஆடினார்.