பாலியல் வழக்கில் சாமியார் கைது!! ஹரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்தது

சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தங்கியிருந்த 2 பெண் பக்தர்களை குர்மீத் ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. ஆனால் குர்மீத் ராம் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டது.

குர்மீத் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்கு மட்டுமல்லாது, தங்கள் அமைப்பு குறித்து புலனாய்வு செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரை கொலை செய்த குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பான வழக்கு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குர்மீத் ராமிற்கு ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் மாநிலங்களில் அதிக ஆதரவாளர்கள் உள்ளனர். குர்மீத் சிங்கின் அமைப்பில் ஏராளமானோர் இருப்பதால் தீர்ப்பை அடுத்து அங்கு வன்முறை வெடிக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் நிறுத்தப்பட்டது. பேருந்து உள்ளிட்ட இதர போக்குவரத்தும் இன்று காலை முடங்கியிருந்தது.

தீர்ப்பையொட்டி நூற்றுக் கணக்கான கார்களின் அணிவகுப்புடன் சாமியார் நீதிமன்றத்திற்கு வந்து நேரில் ஆஜரானார். சிபிஐ நீதிமன்றம் இன்று குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 28 ந் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டு அம்பாலா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாமியார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது. போலீசாரும், துணை ராணுவத்தினரும் வன்முறையை அடக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி