ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜேகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கே கலவரம் ஏற்பட்டுள்ளது.

அதில், இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிபர் விடோடோவுக்கும், முன்னாள் ராணுவத் தளபதி பிரபாவோ சுபியன்டோவுக்கும் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேஷியாவில் மிகவும் சிக்கலான முறையில் கடந்த 17ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஓய்வற்ற வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட பல ஊழியர்கள் இறந்ததோடு, நிறைய‍ பேர் நோயிலும் விழுந்தனர். இந்நிலையில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டம் வெடித்து கலவரமாக மாறியதில், இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக ஜகார்த்தா நகர கவர்னர் தெரிவிக்கிறார்.

மேலும், இந்த தேர்தலில் நிறைய மோசடிகளும் பித்தலாட்டங்களும் நடைபெற்றுள்ளதாக தற்போது தோல்வியை தழுவியுள்ள பிரபோவோ குற்றம் சாட்டியுள்ளார்.