மாஸ்கோ:

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினமான பெண் நாயின் பெயர் லைக்கா. 1957ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ‘‘ஸ்புட்னிக் 2’’ என்ற உலகத்தின் 2வது செயற்கைக்கோள் மூலம் லைக்கா விண்ணுக்கு பயணம் மேற்கொண்டது.

இதன் மூலம் வான்வெளியில் பயணித்த முதல் உயிரினம் என்ற பெருமையை லைக்கா பெற்றது. அங்கு சென்ற சில மணி நேரங்களிலேயே லைக்கா இறந்தது. இந்த செயற்கைகோள் ஒரு தற்கொலை இலக்காக அந்த நாய்க்கு அமைந்துவிட்டது. அந்த செயற்கைகோள் மீண்டும் பத்திரமான பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கவில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக லைக்கா இறந்ததாக ரஷ்யா அப்போது அறிவித்தது. ஆனால் 2002ம் ஆண்டு அக்டோபரில் லைக்கா பிராணவாயுக் குறைபாட்டால் இறக்கவில்லை என்றும், விண்வெளியில் 4 நாட்கள் தங்கியிருந்த லைக்கா வெப்பம் தாங்க முடியாமல் இறந்தது என்று காரணம் கூறியது ரஷ்யா.

வீர மரணம் அடைந்த லைக்காவுக்கு ரஷ்யா கடந்த ஏப்ரல் 11ம் தேதி மாஸ்கோவில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடத்தின் அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் சிலை வைத்துள்ளது.

இந்த செயற்கைகோளின் பேட்டரிகள் 1957ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அன்று செயலிழந்தது. இதனால் தகவல்களை அனுப்புவதை செயற்கைகோள் நிறுத்திவிட்டது. எனினும் 1958ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வரை பூமியை சுற்றி வந்தது.

வல்லரசு யார் என்பதில் ரஷ்யா, அமெரிக்கா இடையே பனிப்போர் அப்போது நடந்தது. விண்வெளியில் கால்பதிக்க என 2 நாடுகளுமே போட்டி போட்டிக்கொண்டு செயல்பட்டன. இதன் எதிரொலியாக உலகின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.