இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து, டெஸ்ட் போட்டிக்காக, ரிஷப் பன்ட் என்ற ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

தோனியின் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கு கேஎல் ராகுல் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். ஆனால், டெஸ்ட் போட்டியில் அந்த இடத்திற்கு யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால், இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதற்காக விடை கிடைத்துள்ளதாகவே நம்பப்படுகிறது.

முதலில் விருத்திமான் சஹாவிற்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத காரணத்தால், ரிஷப் பன்ட் வாய்ப்பு பெற்றார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு, முக்கியமான இரண்டு போட்டிகளில் இந்திய அணி கரைசேர்வதற்கு காரணமாக இருந்தார்.

இதனையடுத்து, வரும் நாட்களிலும் டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்கு இவரே விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்றையப் போட்டியின் மூலம், ஒரு விக்கெட் கீப்பராக தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் பன்ட். அதாவது, குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனைதான் அது.

தோனிக்கு தேவைப்பட்டது 32 இன்னிங்ஸ். ஆனால் ரிஷப் பன்ட்டிற்கு தேவைப்பட்டதோ 27 இன்னிங்ஸ்கள் மட்டுமே.