ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்து மகேந்திர சிங் தோனியின் 12வருட சாதனையை முறியடித்துள்ளார்.

rishap

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று அணியை சமன் செய்தது. இதையடுத்து மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிப்பெற்று 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. வழக்கம் போல் இந்த போட்டிலும் ராகுல் ஏமாற்றம் அளிக்க மயங்க் அகர்வால் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த கேப்டன் கோலி 23 ரன்களிலும், ரஹானே 18 ரன்களிலும் வெளியேறினர்.

எனினும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 18வது சத்தை பூர்த்தி செய்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா அடித்த 3வது சதம் ஆகும். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நடைபெற்ற 2ம் நாள் ஆட்டத்தில் புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் ஆட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து ரன் குவித்த புஜாரா 193 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

புஜாராவைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டியில் இது இவரது 2ஆவது சதமாகும். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்து முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 12 வருட சாதனையை அசால்ட்டா முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைசலாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி 148 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போட்டியை டிக்ளேர் செய்தது.