சஞ்சய் மஞ்ரேக்கரை வறுத்து எடுக்கும் ஆர் ஜே பாலாஜி

சென்னை

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையை  தமிழ் வர்ணனையாளர் ஆர் ஜே பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்.சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருவது வழக்கமாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு ஆதரவாக இவர் வர்ணனைகள் இருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவர் தொடர்ந்து பல சமயங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனியின் விளையாட்டு குறித்து மோசமான வர்ணனை செய்து வந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இப்போதும் அவர் தனது மோசமான வர்ணனையை தொடர்ந்து வருகிறார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 8 ஆட்டங்களில் 7 ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியைப் பற்றி தனது வர்ணனையில் மிகவும் மோசமாக குறிப்பிட்டு வருகிறார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கக் கோரி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலை வற்புறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பிரிவு வர்ணனையாளரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி கிண்டல் செய்துள்ளார். நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் தமிழில் ஆர் ஜே பாலாஜி வர்ணை செய்துக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜி, ”திடீரென பலர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலை பார்க்க தொடங்கி உள்ளனர். அதனால் எங்களது இல்லங்களுக்கு மூட்டை மூட்டையாய் பணம் கிடைத்துள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை தான். நான் போட்டிருக்கும் இந்த கோட், வாட்ச், பேண்ட், ஷூ இவை எல்லாம் வாங்கியதற்கு காரணமும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை தான். குஜராத் மாநிலத்தில் பலர் ஸ்டார் தமிழ் சேனலுக்கு இப்போது சந்தாதாரர்கள் ஆகி உள்ளனர். இதற்கு காரணமும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை தான்” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.