ரஜினி விழாவில் சிவக்குமாரை கிண்டலடித்த ஆர்.ஜே.பாலாஜி

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினி 2.0 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் ஸ்டுடியோஸல் பிரம்மாண்டமாக நடந்தது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஆஸ்கர் விருதுபெற்ற ஒலிக்கலவையாளர் ரசூல் பூக்குட்டி, இயக்குநர்ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை எமி ஜாக்சன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் நடந்த இந்த விழாவில் காலை 9 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்துவிட்டது. அனைவரும் ரஜினியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.

விழாவில் சுபாஸ்கரன், ரஜனி, அக்சய்

9.30க்கு தயாரிப்பாளர் தாணு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பு புகழ் விநியோகஸ்தர் கம் பைனான்சியர் மதுரை அன்பு வந்தார்.நேராகச் சென்று தாணு பக்கத்தில் அமர்ந்தார். இருவரும் சீரியஸாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் லதா ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்தார். தொடர்ந்து ஷங்கர் தனது குடும்பத்துடன் வந்தார். அவரது குடும்பத்தினர் லதா ரஜினி அருகே அமர்ந்தனர். முன் வரிசையில் ஷங்கர் அமர்ந்தார்.

தயாரப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் படக்கலைஞர்கள் ஒவ்வொருவராக அரங்கிற்கு வந்தனர்.

அடுத்தாக.. அனைவரும் எதிர்பார்த்துக காத்திருந்த ரஜினி வந்தார். மழை பெய்துகொண்டிருந்ததால் அவரது கார் மட்டும் அரங்கின் வாசல் வரை அனுமதிக்கப்பட்டது.

அரங்கினுள் வந்த ரஜினி, ஷங்கர் அருகில் அமர்ந்தார். அதுவரை மேடை அருகே குழுமியிருந்த பத்தரிகை புகைப்படக்கலைஞர்கல், ரஜினியைச் சூழ்ந்து படபடவென படங்களை எடுக்க ஆரம்பித்தனர். ஒரே ஆரவாரம்.

இதனால் பின்னால் வீடியோ கேமராக்களை வைத்து படம் பிடித்துக்கொண்டிருந்த தொ.கா. ஒளிப்பதிவாளர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் சத்தம்போட ஆரம்பித்தனர்.

தவிர படத்தின் டிரெய்லரை திரையிடுவதும் தாமதமானது. ஆனாலும் புகைப்படக்காரரகளுக்கு ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டே இருந்தனர்.

ஆர்.ஜே. பாலாஜி

மேடையில் நிகழ்ச்சி தொகுக்க வந்திருந்த ஆர்.ஜே.பாலாஜி, “அய்யா.. புகைப்படக்காரர்களே… பின்னால் இருக்கும் வீடியோ கேமராக்காரர்களுக்கு மறைக்கிறது.. தவிர டிரெய்லர் திரையிட வேண்டும்.. ஆகவே மேடைக்கு அருகில் வாருங்கள்” என்று அறிவித்தார்.

அவரது குரலை புகைப்படக்காரர்கள் பொருட்படுத்தவே இல்லை. இதனால் மீண்டும் மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி அறிவிதுக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர்.. “புகைப்படக்கார நண்பர்களே..  சொல்வதைக் கேளுங்கள். இல்லாவிட்டால் கேமராவை  தட்டிவிட மாட்டோம்.. மீண்டும் கெஞ்சலாக கேட்டுக்கொள்வோம்” என்று நடிகர் சிவக்குமார் செல்பி மேட்டரை வைத்து கிண்டலாக சொல்ல… அரங்கமே சிரித்தது.

செல்போனை தட்டிவிட்ட நிகழ்வில் சிவக்குமார்

இந்த கிண்டலைக் கேட்டு ரஜினியும் ரசித்துச் சிரித்தார் என்றும்.. இல்லையில்லை புகைப்படம் எடுப்ப்பவர்களுக்கு சிரித்து போஸ் கொடுத்தார் என்றும் இருவேறுவிதமாக அரங்கில் பேசிக்கொண்டனர்.

ஹூம்… இன்னும் எத்தனை நாள்தான் சிவக்குமாரை கிண்டல் செய்வார்களோ..!