பாட்னா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.   நேற்று உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.  லக்னோவில் ஒருவரும் மங்களூருவில் இருவரும் மரணம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் நடந்த போராட்டங்களால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது.   நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து ஒரு வாரமாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இந்த போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு,  பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தல் போன்றவை நிகழ்ந்து வருகின்றன

கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 23 ஆம் தேதி பேரணி நடத்துகிறர். பீகார் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு நடத்த ராஷ்டிரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.