பாட்னா

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில புதிய தலைவராக உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஜகதானந்த் சிங் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 1997 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டது.   அப்போது முதல் மாநிலத் தலைவராகத் தாழ்த்தப்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் ஆகிய வகுப்பில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.   ஆனால் கடந்த சில வருடங்களாக உயர்ந்த சாதியினரின் வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைப்பதில்லை என பீகார் மாநில அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பீகார் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளது.    ஏற்கனவே தலித்துகள் மற்றும் இஸ்லாமியர் வாக்குகளைக் குறி வைத்துக் காய் நகர்த்தி வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் அக்கட்சி நிறுவனரின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தற்போது உயர் சாதி வாக்குகளையும் கவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே கட்சியின் 22 ஆண்டு கால சரித்திரத்தில் முதல்முறையாக புக்சர் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும் பீகார் மாநில முன்னாள் நீர்ப்பாசன அமைச்சருமான ஜகதானந்த் சிங் அக்கட்சியின் பீகார் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.   இவர் பீகார் மாநிலத்தின் உயர்சாதியான ராஜபுத்திரர் ஆவார்.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்,”தேஜ்ஸ்வி யாதவின் தலைமையில் இயங்கும் எங்கள் கட்சி உயர்சாதியினருக்கு எதிரான கட்சி என பெயர் பெறுவதை விரும்பவில்லை.    பீகார் மாநிலத்தில் 12% உயர் சாதியினர் வாக்குகள் உள்ளன    அத்துடன் ஜகதானந்த் சிங் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களைக் கவர்ந்தவர் ஆவார்.

தற்போது தேஜஸ்வி யாதவ் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை எனப் பலரும் கூறி வருகின்றனர்.   ஆனால் அது தவறானது.  மூத்த தலைவர்களான ஜகதானந்த் சிங், ரகுவன்ஷ் பிரசாத் சிங், அப்துல் பாரி சித்திக்கி ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சி நடைபெற்று வருகிறது.   அந்த அடிப்படையில் ஜகதானந்த் சிங் பீகார் மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.