லாலு கட்சிக்கு ஒரே நாளில்  அடிமேல் அடி..
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்,( ஆர்.ஜே.டி) பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு, இப்போது ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்னும் நான்கு மாதங்களில் பீகார் சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று ஆர்.ஜே.டி.கட்சிக்கு அடுத்தடுத்து இரு பின்னடைவுகள் ஏற்பட்டன.
பீகார் சட்டமன்ற மேல்சபையில் ஆர்.ஜே.டி.கட்சிக்கு 8 எம்.எல்.சி.க்கள் இருந்தனர். அவர்களில் 5 பேர் நேற்று கட்சியில் இருந்து விலகி, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து விட்டனர்.
இப்போது அந்த கட்சிக்கு முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி உள்ளிட்ட 3 எம்.எல்.சி.க்கள் மட்டுமே உள்ளனர்.
சற்று நேரத்தில் அந்த கட்சி இன்னொரு பெரும் பின்னடைவை எதிர் கொண்டது.
ஆர்.ஜே.டி. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ரகுவஞ்ச் பிரசாத் சிங், அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவஞ்ச் பிரசாத் நான்கு முறை மக்களவை எம்.பி.யாக இருந்தவர். லாலுவுக்கு மிக நெருக்கமானவர்.