’நிதிஷ்குமாரைப் பழி வாங்கும் மோடி’’ லாலு கட்சி பரபரப்பு  குற்றச்சாட்டு..

’நிதிஷ்குமாரைப் பழி வாங்கும் மோடி’’ லாலு கட்சி பரபரப்பு  குற்றச்சாட்டு..

பீகார் மாநிலத்தில் பா.ஜக.ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அருணாசலப்பிரதேச மாநிலத்தில்  ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ,க. வசப்படுத்தியுள்ள நிகழ்வு, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் பேட்டி அளித்த லாலுவின் ஆர்.ஜே.டி. கட்சி துணைத்தலைவர் சிவானந்த திவாரி, 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பாட்னாவில் பா.ஜக. செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, நிதீஷ்குமார் . பா.ஜ.க.கூட்டணியில் இருந்தார்.

செயற்குழுவுக்கு வந்த மோடி உள்ளிட்ட  பா.ஜ.க.தலைவர்களுக்கு விருந்த வைக்க ஒப்புக் கொண்டிருந்த நிதீஷ்குமார் திடீரென அதனை ரத்து செய்தார்.

அந்த சமயத்தில் குஜராத் முதல்-அமைச்சராக இருந்த மோடியின் மீது, நிதீஷ் குமார் அதிருப்தியில் இருந்தார்.

‘’பா.ஜ.க. ஓ.கே.ஆனால் மோடியை ஏற்க மாட்டேன்’’ என்பது நிதீஷ்குமாரின் நிலைப்பாடாக இருந்தது.

இதன் காரணமாகவே அந்த விருந்தை நிதீஷ்குமார் ரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தைச் செய்தியாளர்களுக்கு ஞாபகப்படுத்திய சிவானந்த திவாரி,,’ எதனையும் மோடி மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டார்’’ என தெரிவித்தார்.‘’ அந்த சம்பவத்துக்குப் பழி வாங்கும் வகையில் நிதீஷ்குமாரின் செல்வாக்கைக் குலைக்கும் முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக நிதிஷ்குமாருக்கு எதிராகச் சட்டப்பேரவை தேர்தலின் போது சிராக் பஸ்வான் போர்க்கொடி உயர்த்தினார். சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோற்க சிராக் உதவியாக இருந்தார். பா.ஜ.க.வின் திட்டம் வெற்றி பெற்றது.’’ எனக் குறிப்பிட்ட சிவானந்த திவாரி’’ அதன் தொடர்ச்சியாகவே அருணாசலப்பிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை,பா.ஜ.க,. இழுத்துள்ளது’’ என்றார்.

 ’’அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை ஏன் இழுக்க வேண்டும்’’ என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கட்சியின் செய்தி தொடர்பாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான பாய் வீரேந்திரா அளித்துள்ள பேட்டியில்,’’ நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க வழி வகை செய்ய வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

‘’இப்போது அருணாசலப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் நாளை பீகாரிலும் நிகழும்’’ என எச்சரித்த வீரேந்திரா’’ எஞ்சிய காலத்தில் நிதீஷ்குமார் மரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைத்தால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதே நல்லது’’ என்றார்..