சென்னை:

ஆர்.கே.நகரில் திமுக, பாஜக உள்பட 57 வேட்பாளர்கள் தேர்தலில் டெபாசிட் தொகையை இழந்துவிட்டனர்.

 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன். பாஜக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 59 பேர் போட்டியிட்டனர்.

இதற்காக கடந்த 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு, வாக்கு பெட்டிகள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்பத்திலிருந்தே தினகரன் முன்னிலை பெற்று வந்தார். மொத்தம் 19 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 89,013 வாக்குகள் பெற்று தினகரன் அபாரமாக வெற்றி பெற்றுவிட்டார். அதிமுக 48,306, திமுக 24,651 வாக்குகளும் பெற்றன.

மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3860 வாக்குகளும், பாஜக 1417 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885 ஆகும். இவற்றில் 6-ல் 1 பங்கு அதாவது 29,481 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும்.

அதன்படி தினகரன் அபாரமாக வெற்றி பெற்றுவிட்டார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தனது டெபாசிட் தொகையை பெற்று விட்டார். 59 பேரில் மீதமுள்ள 57 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர்.