ஆர்.கே.நகர்: பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் பறக்கும்படைமீது தாக்குதல்!

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. வரும்‘ 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டவாடா செய்த அதிமுக பிரமுகரை, பறக்கும் படை போலீசார் பிடித்தபோது, அவர்களை தாக்கிவிட்டு தப்பி விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதை  தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர் தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட சுயேச்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக  கருப்புச்சாமி என்பவரை பறக்கும் படையினர் பிடித்தனர். அவர் அதிமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது பறக்கும் படையினரை தாக்கிவிட்டு கருப்புச்சாமி மற்றும் அவரது  ஆதரவாளர்கள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.