ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ., வி.சி., அறிவிப்பு

சென்னை:

ர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

அ.தி.மு.க. (சசிகலா அணி),  அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) அணி, தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., ஆகியகட்சிகள் தங்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.

இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணியின் நிலைபாடு குறித்து அக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. நான்கு கட்சிகள் அங்கம் வகித்த ம.ந.கூட்டணியில் சமீபத்தில் ம.தி.மு.க. வெளியேறியதால், மீதமுள்ள சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி. ஆகிய கட்சிகள் ஆலோசையில் ஈடுபட்டன.

இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற முடிவில் சி.பி.ஐ. கட்சியும், வி.சி.கட்சியும் இருந்தன. ஆனால் சி.பி.எம். கட்சி, வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இதையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவரும், சி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

திருமாவளவன் – முத்தரசன்

அப்போது திருமாவளவன், “ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சி.பி.எம். கட்சி பிடிவாதமாக இருந்ததால் நாங்களும் சி.பி.ஐ. கட்சியும் தனத்து முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்” என்றார்.

சி.பி.ஐ. கட்சியின் முத்தரசன், “வேட்பாளரை நிறுத்தியே ஆவது என்று சி.பி.எம். கட்சி, மிகப்பிடிவாதமாக இருந்ததால், நாங்கள் விலகி நிற்கிறோம். எங்கள் இரு கட்சியும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் எந்தவொரு கட்சியையும் ஆதரிப்பது இல்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்.” என்றார்.

மேலும் அவர், “சி.பி.எம். கட்சியுடன் மற்ற விசயங்களில் எங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை. இந்த விசயத்தி்ல் மட்டும் முரண்பாடு” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.