சென்னை,

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை  ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக டிடிவி தினகரனும் களத்தில் உள்ளார்.  கடந்த இரண்டு வாரமாக நடைபெற்ற அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் பணப்பட்டுவாடா நடைபெறுவ தாக பல புகார்கள் வந்தன. ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலை யில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு நடத்திய சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று திடீரென டில்லி சென்றார்.

இதன் காரணமாக  பரபரப்பு நிலவியது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அப்போதும், சிறப்பு தேர்தல் அதிகாரியாக செய்லபட்ட விக்ரம் பத்ரா, பணப்பட்டு வாடா குறித்து அறிக்கை தாக்கல் செய்து, அதன் காரணமாக  தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவர் திடீரென டில்லி சென்றதும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்று வதந்திகள் உலா வந்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வாறு வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ரத்து என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், நாளை திட்டமிட்டபடி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.