சென்னை

ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் காலியாக இருந்த ஆர் கே நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  ஆனால் அந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.  அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்றது.  அதை தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

தற்போது குஜராத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் இந்த வருட இறுதிக்குள் ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.  ஆர் கே நகரில் திமுக சார்பில் போட்டியிட இருந்த மருது கணேஷ் பணப்பட்டுவாடா குறித்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  போலி வாக்காளர்களை நீக்கக் கோரி ஆர் எஸ் பாரதி மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் ஆணையம் இந்த வழக்குகளால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.   தேர்தல் ஆணையத்தின் மனுவை ஏற்றுக் கொண்ட சென்ன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை ஆர் கே நகர் தேர்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.