ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு


சென்னை: 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால்,  இந்நிலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளியாட்கள் உடடினயாக தொகுதியை விட்டு வெளியேற  தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பரபரப்பாக நடைபெற்று வந்த  ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.  நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில்,

இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும்வரை பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்குத் தடை விதித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி பணியாளர்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியேற வேண்டும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு, வாங்குவதற்கு, பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது முறைகேடான செயலாகும்.

தேர்தல் தொடர்பான பிரசாரங்களை எந்தவொரு ஊடகங்களின் வாயிலாகவும் வெளியிடக் கூடாது.

தேர்தல் பிரசாரம் குறித்து இசை நிகழ்ச்சி உள்பட எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.